இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக, ரோகித் ஷர்மா 140, கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 337 ரன்கள் இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகர் சமான், இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். இந்நிலையில், இந்தப் போட்டியில் இருந்து புவனேஷ்வர் குமார் திடீரென விலகினார். மூன்றாவது ஓவரில் பந்து வீச வரும்போது, அவரது இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் உடனடியாக பெவிலியன் திரும்பினார்.
அவருக்கு பதிலாக அந்த ஓவரில் மீதமிருந்த இரண்டு பந்துகளை விஜய் சங்கர் வீசினார். இந்தக் காயத்தால், புவனேஷ்வர் குமார் உலகக்கோப்பை தொடரில் இருந்தே விலகுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. தற்போது அந்த வரிசையில் புவனேஷ்வர் குமாரும் இணைந்துள்ளதால், இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.