உலகக்கோப்பை 2019 இறுதிப் போட்டியை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது. திரில்லர் படத்தின் கிளைமாக்ஸ் மக்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் தருணத்தைப் போன்று தான் இறுதிப்போட்டியின் போது இங்கிலாந்து - நியூசிலாந்து ரசிகர்களுக்கு இருந்திருக்கும்.
கிரிக்கெட் போட்டி பல முறை டையில் முடிந்திருந்தாலும், சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது யாரும் எதிர்பாராத திருப்பம். கடைசியில் பவுண்டரி எண்ணிக்கையின் அடிப்படையில் கோப்பையை இங்கிலாந்து அணி தட்டிச் சென்றது. இப்போட்டியின் பரபரப்பை இன்றுவரை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அத்தகைய வரலாறு படைத்த இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் பென் ஸ்டோக்ஸ் சூப்பர் ஒவரின் முன்பு சிகரெட் பிடித்ததாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் சார்பில் வெளியான 'மோர்கன் மென்: தி இன்சைட் ஸ்டோரி ஆஃப் இங்கிலாந்த் ரைஸ் ஃப்ரம் கிரிக்கெட்' என்ற புத்தகத்தில், "பரபரப்பு வாய்ந்த சூப்பர் ஒவருக்கு முன்பு 27 ஆயிரம் ரசிகர்கள் இருக்கும் மைதானத்தில் அமைதியான இடத்தைக் கண்டறிவது சிரமம்தான்.
இருப்பினும், கேமராக்கள் வீரர்களை பின்தொடர்ந்து டிரஸ்ஸிங் ரூமின் படிக்கட்டு வரை சென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் பென் ஸ்டோக்ஸ் பல முறை விளையாடியுள்ளதால் அனைத்துப் பகுதிகளையும் நன்கு அறிவார். இங்கிலாந்து கேப்டன் மார்கன் வீரர்களுக்கு அறிவுறை சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில், இரண்டு மணி நேரம் விளையாடிய களைப்பிலிருந்து பென் ஸ்டோக்ஸ், முகம் முழுவதும் வியர்வை இருந்த காரணத்தினால் அங்கிருந்து சிறு குளியல் போட முடிவு செய்தார்.
அதன்பின், நேராக டிரஸ்ஸிங் ரூம் பின்புறம் உள்ள உதவியாளரின் அலுவலகத்திற்குச் சென்று குளித்துள்ளார். இதுமட்டுமின்றி இறுதி ஓவர் பதற்றத்திலிருந்த ஸ்டோக்ஸ் சிகரெட் பிடித்துவிட்டு, பின்னர் மீண்டும் அறைக்குள் வந்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்டநாயகனாக வலம்வந்த ஸ்டோக்ஸ், சிகரெட் பிடித்துவிட்டு தான் மைதானத்திற்கு வந்தார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.