உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகவும் பரபரப்பான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று இரண்டு முறை டிரா ஆன போதிலும் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணியின் வசம் உலகக்கோப்பை சென்றது.
இந்த இறுதிப்போட்டியில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்ததால், அதிலிருந்து வெளியே வர முடியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் இன்று வரை அதை பற்றி தான் பேசிக்கொண்டிருக்கின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்களும் குறிப்பாக பவுண்டரிகள் அடிப்படையில் வழங்கப்பட்ட இறுதி முடிவு குறித்து தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அந்த விதி குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர், பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியாளரை தீர்மானித்ததற்கு பதிலாக இன்னொரு சூப்பர் ஓவர் வழங்கியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இது உலகக்கோப்பை ஃபைனலில் மட்டுமல்ல எல்லா போட்டிகளிலும் முக்கியமானது தான் என்பதால் இந்த முடிவு தேவை. கால்பந்து போட்டிகளில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் கூடுதல் நேரம் வழங்குவது போல் கிரிக்கெட்டிலும் இதுபோல் வழங்கலாம். இது எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மேலும் தொடர் முழுவதிலும் சிறப்பாக ஆடிய முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.