நடப்பு சீசனுக்கான டி10 கிரிக்கெட் லீக் நேற்று முன்தினம் தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் மரத்தா அரபியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்த சீசனின் முதல் போட்டியில் மரத்தா அரபியன்ஸ் - நார்தன் வாரியர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் மூலம், யுவராஜ் சிங் (யுவி) டி10 போட்டியில் அறிமுகமானார்.
டி20 போட்டியில் சிக்சர்களைப் பறக்கவிடும் யுவராஜ் சிங், தனது முதல் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், முதலில் பேட்டிங் செய்த மரத்தா அரபியன்ஸ் அணியில் நான்காவது வரிசையில் களமிறங்கிய யுவராஜ் சிங், ஆறு பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட ஆறு ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸலின் அதிரடியால், நார்தன் வாரியர்ஸ் அணி ஏழு ஓவர்களிலேயே மரத்தா அரபியன்ஸ் நிர்ணயித்த 89 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எளிதில் எட்டியது. 24 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஆறு சிக்சர் என ரஸல் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தார்.
டி10 தொடரில் அறிமுகமான முதல் போட்டியில் சொதப்பிய யுவராஜ் சிங், நாளை குவாலந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மரத்தா அரபியன்ஸ் - குவாலந்தர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஒன்பதாவது டி10 போட்டி நாளை இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு சோனி டென் 1 சேனலில் ஒளிப்பரப்பாகிறது.