கரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டில் நடக்கவிருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் திட்டமிட்டபடி எதிர்காலத்தில் ஒவ்வொரு தொடரையும் நடத்த முடியுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சச்சின் டெண்டுல்கர் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், '' உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஒலிம்பிக் தொடரைப் பின்பற்ற வேண்டும். ஒலிம்பிக் தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டாலும், அதனை டோக்கியோ ஒலிம்பிக் 2020 என்றே அழைக்கிறார்கள். அதேபோல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் நடக்க வேண்டும். எப்படி ஒலிம்பிக் போட்டிகளில் அனைத்து வீரர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறதோ, அதேபோல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அனைத்து அணிகளுக்கும் சரியான வாய்ப்பை வழங்க வேண்டும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் இது தொடங்கப்பட்டு பாதி வழியில் நிற்கிறது. அதனால் அதனை முடிக்க வேண்டும். அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தற்போது நடக்க வேண்டிய கிரிக்கெட் தொடர்களை ஒத்திதான் வைத்துள்ளன. ரத்து செய்யவில்லை. அதனால் அதனை நடத்துவதற்கான திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல் அணிக்காக விளையாடும் வீரர்கள் ஃபிட்னெஸ் வைத்து தேர்வு செய்யப்பட வேண்டுமா அல்லது வயதினை வைத்து தேர்வு செய்யப்பட வேண்டுமா என்றும், சீனியர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் எனவும் கிரிக்கெட் வீரர்கள் பற்றி பொதுவெளியில் விவாதம் ஒன்று பேசப்பட்டு வருகிறது.
ஏன் இந்திய அணிக்குள்ளும் இளைஞரான ரிஷப் பந்திற்கு வாய்ப்பளிக்க வேண்டுமா அல்லது சஹாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமா என விவாதங்கள் எழுந்துள்ளன.
என்னைப் பொறுத்தவரையில் அணிக்கு யார் சரியாக இருப்பார்களோ அவர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும். இளைஞர் என்பதாலோ, சீனியர் என்பதாலோ யாருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படக்கூடாது. ஒருவர் ஃபிட்னெஸுடன் இருந்து வயதைக் காரணம் காட்டி அணியில் வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்பதுதான் எனது கருத்து.
நான் ரிஷப் பந்த்தைவிட சஹாவோ, சஹாவைவிட ரிஷப்போ சிறந்தவர்கள் எனக் கூறவில்லை. யார் சிறப்பாக ஆடுவார்களோ அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், அதனை அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: தலைவன் ஒருவனே: சச்சின்... சச்சின்...!