ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், தென் ஆப்பிரிக்க - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்தத் தொடரின் நான்காவது லீக் போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு நட்டாலியா சேவியர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரைசதமடித்து அசத்தினார்.
ஆனால் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில், அயபோங்கா காக்கா (Ayabonga Khaka) மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டேன் வான் நீகெர்க் (Dane van Niekerk) 46 ரன்களையும், மரிசேன் காப் (Marizanne Kapp) 38 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 19.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கையடைந்தது.
மேலும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டேன் வான் நீகெர்க் ஆட்டநாயகியாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க: சோபி டிவைன் அதிரடியில் இலங்கையைப் பந்தாடிய நியூசிலாந்து!