இந்திய மகளிர் அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனையாக வலம்வருபர் ஸ்மிருதி மந்தனா. உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றினால் முடங்கியுள்ள நிலையில், அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர், வீராங்கனைகள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த மந்தனா, இந்தியாவில் நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரானது, இந்திய கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உதவுமென தெரிவித்துள்ளார்.
இது குறித்து மந்தனா கூறுகையில், 'சர்வதே அளவில் மகளிர் கிரிக்கெட்டானது தற்போது முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ஆடவர்களைப் போல மகளிர் கிரிக்கெட்டிற்கும் தற்போது வரவேற்பு பெருகிவருவதே ஆகும்.
இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டிற்கும், உள்ளூர் கிரிக்கெட்டிற்கும் இன்னும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மகளிர் ஐபிஎல் தொடரும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் மகளிர் ஐபிஎல் தொடரினால் இந்திய கிரிக்கெட்டானது அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்லவும் உதவியாக உள்ளது.
மேலும் மகளிர் ஐபிஎல் தொடரிலும் ஆறு அணிகள் பங்கேற்கலாம் என்ற மாற்றத்தைக் கொண்டுவந்தால், அது இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கும் மிகவும் பலனளிக்கும் ஒன்றாக அமையும்' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, இந்தாண்டிற்கான மகளிர் ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒருங்கிணைந்த மும்பை & சென்னை அணியின் கேப்டனாக ஜாம்பவானை நியமித்த ரோஹித், ரெய்னா!