தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்றுத் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீராங்கனைகளான லீ 4, லாரா 4, ஸ்டெயின் 4, லூஸ் 0 என அடுத்தடுத்து சனா மிர் பந்துவீச்சில் வெளியேறினர். பின்னர் வந்த பிரீஸ் அதிரடியாக 18 ரன்கள் சேர்த்து மிர் பந்தில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ட்ரியான் 21 ரன்களில் வெளியேற, ஆட்டம் பாகிஸ்தான் கைகளுக்குச் சென்றது. பின்னர் வந்த வீராங்கனைகள் யாரும் சோபிக்காத்தால் தென்னாப்பிரிக்க அணி 22.5 ஓவர்களில் 63 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து 64 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணியின் தொடக்க வீரர்களாக நகிடா - அமீன் ஆகியோர் களமிறங்கினர். நகிடா 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் அமீன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜவேரியா கான் - கேப்டன் மரூஃப் இணை ஆட்டமிழக்காமல் 14.4 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜவேரியா 34 ரன்களும், மரூஃப் 12 ரன்களும் எடுத்தனர்.
மேலும், அந்நிய மண்ணில் பாகிஸ்தான் மகளிர் அணி பெற்ற முதல் வெற்றியாக இது பதிவானது, அதேபோல், குறைந்த ஓவர்களில் வெற்றியைப் பெற்ற அணியாகவும் சாதனை படைத்தது.