2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 50 பதக்கங்களைப் பெறவேண்டும் என்ற குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களோடு 2016ஆம் ஆண்டு நிதி அயோக் குழு ஒரு திட்டத்தை மக்கள் முன் வைத்தபோது, அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஆனால் அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை இந்தியன் ஒலிம்பிக் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதனை நிறைவேற்றுவதற்கு சில சின்னச்சின்ன இலக்குகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் நிர்ணயித்தது. இந்த இலக்குகளை நினைக்கையில் கூடவே நம் மனதில், புதிய தசாப்தத்தில் இந்த திட்டங்கள் நிறைவேறுவதற்கான நடைமுறை சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
அந்தத் திட்டம் என்னவென்றால், 2021ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை நடத்துவதுடன் 2026ஆம் ஆண்டுக்கான யூத் ஒலிம்பிக் கேம்ஸ் மற்றும் 2030ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு ஆகிய போட்டிகளை நடத்த ஆறு மாதத்திற்கு முன்னதாக இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்தர் பத்ரா கூறியிருந்தார்.
இந்தத் திட்டம் ஆசிய போட்டிகளோடு நின்றுவிடவில்லை. அது 2026 (அ) 2030ஆம் ஆண்டு காமன்வெல்த் கேம்ஸ் மற்றும் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் திட்டம் உள்ளது என்றார்.
ஒலிம்பிக் போன்ற பெரும் விளையாட்டு போட்டிகளை இந்தியா போன்ற நாடு நடத்துவதற்கு அனுமதி கிடைக்குமா என்றால், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியா சரியாக நடத்தினால், ஒலிம்பிக் போட்டிகளை நடத்த நிச்சயம் அனுமதி கிடைக்கும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்புகிறது.
2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என யோசிக்கையில், இந்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான செலவுகளைவிட மூன்று மடங்கு அதிகமாகும், அதாவது ரூ.1,85,000 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகள், அந்த நேரத்தில் மாறவும் செய்யலாம். இதனிடையே 2032ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தென் கொரியா, வட கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன.
குறைந்தது 16 விளையாட்டு மதிப்புமிக்கப் போட்டிகளை (இறுதி செய்யப்படவில்லை) நிச்சயம் நடத்திடவேண்டும் என இந்தியா ஆர்வம் காட்டிவருகிறது. அதேபோல் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகளையும் விளைவுகளையும் சிறிதும் சிந்திக்காமல், இந்திய ஒலிம்பிக் சங்கம் போட்டிகளை நடத்துவதில் ஏன் ஆர்வம் காட்டிவருகிறது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
சில மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதால் சியோல், லண்டன், பார்சிலோனா உள்ளிட்ட நாடுகளில் உள்கட்டமைப்பு, சுற்றுலா, சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பு ஆகியவை உயர்ந்துள்ளது. ஆனால் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதால் சில நாடுகளில் பெரும் விளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. 1976ஆம் ஆண்டுக்கான மாண்ட்ரியல் விளையாட்டுப் போட்டிகளை கனடா நடத்தியது. இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தியால், கனடா நாட்டின் பட்ஜெட்டில் பற்றாக்குறையே ஏற்பட்டது. இந்த பிரச்னையிலிருந்து வெளிவர முடியாமல் சுமார் 40 ஆண்டுகள் கனடா தவித்தது.
2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் ஒலிம்பிக் போட்டி நடத்தியதால் ஏற்பட்ட செலவினங்களில் இருந்து இன்றுவரை கிரீஸ் மீளமுடியாமல் உள்ளது. ஃபிஃபா உலகக்கோப்பை தொடருக்காக தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கட்டப்பட்ட மைதானங்கள், அந்தத் தொடருக்கு பின் ஏன் கட்டப்பட்டது என இன்றுவரை தெரியாமல் உள்ளது. ஏன் இந்தியாவிலும் 10ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்காக கட்டப்பட்ட மைதானங்களில், பாதிக்கும்மேல் இன்று வரை பயன்படுத்தப்படாமல் உள்ளது.
காமன்வெல்த் போட்டிகளின் தொடக்கம் மற்றும் முடிவு விழாக்கள் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில் ஜவஹர்லால் நேரு மைதானத்தைப் புதுப்பிப்பதற்காக ரூ.960 கோடி செலவிடப்பட்டது. அதையடுத்து ஜவஹர்லால் நேரு மைஹானம் கவனிப்பாடின்றி உள்ளது. இப்படி கவனிக்கப்படாமல் இருப்பதற்காக தான் ரூ. 960 கோடியும் செலவிடப்பட்டதா?
காமன்வெல்த் போட்டிகளின் போது உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டது. ஆனால் அதனையெல்லாம் பாதுகாப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் நிறுத்தப்பட்டு, தற்போது அந்த நிதிகள் வெள்ளை யானைகளை பராமரிப்பதற்கு சென்றுள்ளது. இதேபோன்ற அனுபவங்கள் மற்ற நாடுகளுக்கும் உள்ளது.
காமன்வெல்த் போட்டிகளின் போது செய்யப்பட்ட ஊழல்கள் நாட்டையே உலுக்கியது. இதுபோன்ற சோகமான வரலாறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க இந்திய அரசும், இந்திய ஒலிம்பிக் சங்கமும் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்பது பற்றி தெரியவில்லை. இவையனைத்தையும் கடந்து , இதுபோன்ற உலகத்தரம் வாய்ந்த மதிப்புமிக்க போட்டிகளை நடத்துவதில் இந்தியா ஏன் ஆர்வம் காட்டி வருகிறது என்பதுதான் மீண்டும் மீண்டும் அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது.
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வீரர்கள் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை இரண்டு தான். கிட்டதட்ட 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நாட்டில் இரண்டு பதக்கங்கள் மட்டும் கைப்பற்றப்பட்டது.
தெற்காசியப் போட்டிகளில் அதிக எண்ணிகையிலான பதக்கங்களை கைப்பற்றியுள்ளோம் என தற்பெருமை கொள்ளும் இந்தியா, உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பார்த்தால் வழக்கம்போல் இந்தியாவின் நிலை பல்லிளிக்கிறது.
2012ஆம் ஆண்டு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த அஜய் மாக்கான் கூறும்போது, சர்வதேச தடகள சாம்பியன்ஷிப்பின் சில போட்டிகளில் இந்தியா கடினமாக போட்டியிட்டது. இது தொடர்ந்தால், 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா நிச்சய்ம் 20 பதக்கங்களைப் பெறும் என்றார். தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் கிரன் ரிஜிஜு, 2024 மற்றும் 2028ஆம் ஆண்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நிச்சயம் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் என கூறியிருக்கிறார்.
இந்த கனவுகள் உண்மையாக வேண்டும் என்றால், மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவற்றின் கவனம் தடகள வீரர்களை தயார் செய்வதில் இருக்கவேண்டுமே தவிர மதிப்புமிக்க போட்டிகளை நடத்துவதில் இருக்கக்கூடாது.
பள்ளிப் பருவத்திலேயே பெரும் போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்களை உருவாக்காததே சர்வதேச அளவில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என சில ஆண்டுகளாக பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சீனா உள்ளிட்ட நாடுகளில் 8 லட்சத்திற்கும் அதிகமான உடற்பயிற்சி கூடங்களும், மூவாயிரத்திற்கும் மேலான விளையாட்டு வசதி கூடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் சிறு வயதிலேயே, அதாவது நான்கு வயதிலேயே குழந்தைகளின் திறமைகளை கண்டு, அதற்கேற்ப பயிற்சியளிக்கின்றன. அமெரிக்காவில், NCAA என்ற அமைப்பு உள்ளது. இந்த NCAA, மாணவர்களை கல்லூரி பருவத்திலேயே தடகளத்தில் பதக்கம் பெரும் அளவிற்கு மாணவர்களை தயார் செய்யும்.
ஆனால் நம் நாட்டிலோ பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்களின் பதவிகள் காலியாகி இருக்கும் நிலைதான் உள்ளது. இங்கே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல், பெரிய மாற்றங்கள் செய்தால் நிச்சயம் பலன் தராது.
இந்தியாவில் செயல்படும் தனியார் பள்ளிகள் சரியான மைதான வசதி, மாணவர்களின் விளையாட்டு நேரம், விளையாட்டு உபகரணங்களுக்கு வசதி என விளையாட்டு சம்பந்தமாக எவ்வித வசதிகளையும் செய்யாமல் அனைவரும் அடிப்படை கல்வி உரிமையை புறக்கணிக்கின்றன. இந்தியா நீண்டகாலமாக விளையாட்டுக்கான பாரம்பரியமிக்க நாடு என்றாலும், இந்த நாட்டில் உள்ள திறமைகளையும் வளங்களையும் முழுமையாக பயன்படுத்தவில்லை என்றால், இங்கே எவ்வித விளையாட்டு நிகழ்வையும் கொண்டாடுவதற்கு மக்கள் தயாராக இருக்கமாட்டார்கள்...!
இதையும் படிங்க: ’சதுரங்க இளவரசி’ ஹம்பியின் கதை!