ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் நான்காவது வரிசைதான் நீண்ட நாள் பிரச்னையாக இருந்துவருகிறது. ஒருநாள் போட்டியில்தான் இந்த தலைவலி என்றால் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஓப்பனிங் வரிசையே கேள்விகுறியாக இருக்கிறது. மயங்க் அகர்வால் தொடக்க வீரராக அசத்தி வந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான கே.எல். ராகுலின் ஃபார்ம் இந்திய அணிக்கு பெரும் கவலையளிக்கிறது.
ஏனெனில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் 101 ரன்களை மட்டுமே எடுத்தார். அதில் ஒரு அரைசதம் கூட இல்லை. இதனால், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அசத்தி வரும் ரோகித் ஷர்மாவை டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வரிசையில் களமிறங்கச் செய்யலாம் என பல்வேறு வீரர்களும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இதுக் குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில்,
"தேர்வுக்குழுவாக நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் முடிந்தப் பிறகு இது குறித்து இன்னும் விவாதிக்கவில்லை. ஒருவேளை இதுக் குறித்த ஆலோசனை மேற்கொண்டால் நிச்சயம் ரோகித் ஷர்மா ஓப்பனிங்கில் களமிறங்கப்படலாம். கே.எல். ராகுல் திறமையான வீரர்தான். இருப்பினும் டெஸ்ட் போட்டியில் அவரது ஃபார்ம் கவலையளிறிக்கிறது. அவர் டெஸ்ட் போட்டியில் ஃபார்முக்கு திரும்ப கடின பயிற்சியில் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் ஹிட்மேன் ரோகித் ஷர்மா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.