இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியது ரசிகர்கள், வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில், இவருக்குள் இருந்த பேட்டிங் திறமையைக் கண்டு ஸ்டீவ் வாக், மைக்கல் வாகன், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல்வேறு வீரர்களும் வியப்படைந்ததோடு மட்டுமின்றி, இவர் அடுத்த சச்சின், சேவாக் என்று பாராட்டினர்.
19 வயது உட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி, 2018இல் உலகக்கோப்பையை வென்று தந்தார். இதைத்தொடர்ந்து, 2018இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். அறிமுகமான முதல் தொடரிலேயே ஒரு சதம், ஒரு அரைசதம் என 237 ரன்களை விளாசினார்.
இவரது அசாத்தியமான பேட்டிங் திறமையால் இவர், 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால், பயிற்சி போட்டியின்போது இவருக்கு காயம் ஏற்பட்டதால், அணியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற சையத் அலி முஷ்டாக் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார்.
அப்போது, இவர் தடைசெய்யட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதால், எட்டு மாத காலம் (நவம்பர் 15 வரை) கிரிக்கெட் விளையாடக் கூடாது என பிசிசிஐ தடைவிதித்தது.
இந்நிலையில், இது குறித்து பிரித்வி ஷா உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். அதில், "நவம்பர் மாதம் வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்பதை நேற்றுதான் தெரிந்துகொண்டேன். சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின்போது, நான் காயத்தில் இருந்து மீண்டுவந்தேன்.
அப்போது எனக்கு இருமல் இருந்ததால், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது. இதனால், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் மருந்தை உட்கொண்டுவிட்டேன். நான் செய்தது தவறுதான். இதை நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன்.
இனி யாரும் இந்த தவறை செய்ய வேண்டாம், பிசிசிஐயின் விதிமுறைகளை பின்பிற்றுங்கள். கிரிக்கெட்தான் எனக்கு வாழ்க்கை. மும்பை அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் கிரிக்கெட் விளையாடுவதைவிட எனக்கு வேறு எந்த பெரிய பெருமையும் இல்லை. நிச்சயம் இந்த தடையில் இருந்து மீண்டுவருவேன். எனக்காக ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி" என பதிவு செய்துள்ளார்.