பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினால் தங்களுக்கு உரித்தான ஸ்டைலில் அதை கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் தான் விக்கெட்டுகளை வீழ்த்தியபின் அதை நோட் புக்கில் பெயரை எழுதி வைப்பதை போன்று செலிபிரேட் செய்வது வழக்கம்.
2017ஆம் ஆண்டில் ஜமைக்காவில் நடந்த டி20 போட்டியில் கெஸ்ரிக் வில்லியம்ஸின் பந்துவீச்சில் இந்திய அணியின் கேப்டன் கோலி ஆட்டமிழந்தார். கோலியின் விக்கெட்டை வீழ்த்தியபின் அதை நோட் புத்தக்கத்தில் பெயரை எழுதி வைப்பதை போன்று சைகை செய்து கொண்டாடினார்.
சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2019 ஹைதராபாத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் கோலி இதற்கு பதிலடி தந்தார். கெஸ்ரிக் வில்லியம்ஸின் பந்துவீச்சை அவர் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக விளாசினார். அப்போது, கெஸ்ரிக் வில்லியம்ஸின் நோட்புக் கொண்டாட்டத்தை கோலி செய்து காட்டி பதிலடி தந்தார்.
இந்நிலையில் இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து கெஸ்ரிக் வில்லியம்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "2017இல் ஜமைக்காவில் நடந்த போட்டியில்தான் நான் முதன்முறையாக கோலியிடம் அப்படியொரு கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன். எனக்கு அந்த கொண்டாட்டம் பிடித்ததாலும் எனது ரசிகர்களுக்காகவும்தான் நான் அப்படி செய்தேன். ஆனால் கோலி அதை அப்படி எடுத்துக்கொள்ளவில்லை.
அந்த போட்டி முடிந்தபிறகு கோலியிடம் கைகுலுக்கச் சென்றேன். அப்போது அவர் நான் நன்றாக பந்துவீசுகிறேன் என என்னிடம் தெரிவித்தார். அவர் என்னுடன் கடுமையாகவும் நடந்துகொள்ளவில்லை.2019ஆம் ஆண்டில் டி20 போட்டியில் அவர் பேட்டிங்கில் களமிறங்கியவுடன் நேராக என்னை நோக்கி "இன்று உங்களது நோட்புக் கொண்டாட்டம் வேலைக்கு ஆகாது என்பதை நான் உறுதி செய்கிறேன் என தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு முறை அவருக்கு பந்துவீசிய போதும் அவர் அதை கூறிக்கொண்டே இருந்தார். பதிலுக்கு நான் நண்பா வாயை மூடிக்கொண்டு பேட்டிங் செய்யுங்கள். நீங்கள் நடந்துக்கொள்வது குழந்தைதனமாக உள்ளது என்றேன். ஆனால் அவரது காதுக்கு வாயை மூடிக்கொண்டு பேட்டிங் செய்யுங்கள் மட்டுமே கேட்டுள்ளது. நான் பந்துவீச நடந்துச்சென்றதால் குழந்தைதனமாக நடந்துக்கொள்ளாதீர்கள் என்று கூறியது அவருக்கு கேட்கவில்லை.
அந்த போட்டியில் அவர் எனது பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். அவர் பேசியதே எனது தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. எல்லாம் சரியாகிவிடும் என நான் நினைத்துக்கொண்டே இருந்தேன். ஆனால், அது சரியாகவில்லை என்றார். ஹைதராபாத்தில் நடந்த அப்போட்டியில் கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோனியால் ஸ்பெஷலான எனது டெஸ்ட் அறிமுகம் - கே.எல்.ராகுல் நெகிழ்ச்சி!