அயர்லாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய கேம்ப்பெல், ஹோப் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 381 ரன்கள் எடுத்தது.
382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு தொடக்கமே சறுக்கலாக அமைந்தது. அந்த அணியின் முக்கிய வீரர்களான போர்ட்டர் ஃபோல்டு 12, ஸ்டிர்லிங் 0, பால்பிர்னி 29, டக்கர் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் வந்த கெவின் ஓ பிரையன் - வில்சன் இணை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சுக்கு சிறிது நேரம் தாக்குபிடித்தனர். கெவின் ஓ பிரையின் 68 ரன்களிலும், வில்சன் 30 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வந்த டெய்லண்டர்கள் யாரும் குறிப்பிடும்படி சோபிக்காததால் அயர்லாந்து அணி 34.4 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 196 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக ஆஷ்லி நர்ஸ் 4 விக்கெட்டுகளையும், ரோச் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக 179 ரன்கள் குவித்த கேம்ப்பெல் தேர்வு செய்யப்பட்டார்.