இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் ஏற்கனவே நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளில், முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் பங்கிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது, ஒடிசாவிலுள்ள கட்டாக் நகரில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியுடனான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்த வரை 15 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த சரித்திரத்தை இழக்க தயாராகயில்லை. ஏனெனில் 2004ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி தொடர்ந்து இரு ஒருநாள் தொடரை இழந்ததில்லை. ஆனால் இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரை ஏற்கெனவே 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி தோற்கும் பட்சத்தில் 15 ஆண்டுகளுக்கு பின் மோசமான சாதனையைப் படைக்கும். இதனால் தனது மொத்த வித்தையையும் களத்தில் காட்டும் முனைப்புடன் இந்திய அணி இன்று களமிறங்கவுள்ளது.
இந்திய அணியின் பலம் / பலவீனம்:
இந்திய அணியைப் பொறுத்தவரையில் டாப் ஆர்டர்கள் தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. ஏனெனில் கடந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா இருவரும் சதமடித்து, பார்ட்னர்ஷிப் முறையே 227 ரன்களை சேர்த்து அசத்தினர்.
இவர்கள் இருவரும் இன்று தங்களது உச்சகட்ட ஃபார்மிற்குவரும் பட்சத்தில் எதிரணியின் பந்துவீச்சுகள் இன்று வானவேடிக்கையாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. அதேபோல் இந்தியாவின் நீண்டநாள் தேடலுக்கு பலன் கிடைத்தது போல் நான்காம் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பேட்டிங்கில் பந்துவீச்சாளர்களை சோதித்து வருகிறார்.
அதேபோல் ரிஷப் பந்த் தற்போது ஓரளவு பேட்டிங்கில் கவனம் செலுத்துவதினால், பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்திய அணி உச்சகட்ட ஃபார்மில்தான் உள்ளது. பந்துவீச்சில் மீண்டும் தங்களது சுழல் மூலம் எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கின்றனர் குல்தீப், ஜடேஜா. ஆனால் இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களின் நிலைதான் சிறிது தயக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஏனெனில் ஒருபக்கம் முகமது ஷமி ரன்களைக் கட்டுபடுத்தினாலும், மறுபக்கம் அனுபவமில்லாத ஷர்துல் தாக்கூ, நவ்தீப் சைனி என இருவரின் பந்துவீச்சு குறித்தே தற்போது கேள்வி எழுகிறது. அவர்கள் இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசினால் இந்திய அணியின் வெற்றியானது உறுதியாகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பலம் / பலவீனம்:
வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரையில் இன்றைய போட்டியில் நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கவுள்ளது. அந்த அணியில் ஷாய் ஹோப், ஹெட்மையர், பூரான், லூயிஸ், பொல்லார்ட் என நட்சத்திர பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது.
இதில் யாரேனும் ஒருவர் நிலைத்து நின்றுவிட்டால் கூட ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடுவார்கள். இத்தொடரில் ஹோப், ஹெட்மையர், பூரான் ஆகியோர் ஏற்கெனவே தங்களது திறமைகளை காட்டிவிட்டனர். மேலும் உள்ள வீரர்கள் தங்களது ஃபார்மிற்கு திரும்பிவிட்டால் இந்திய அணியின் நிலை கொஞ்சம் கவலைக்கிடம்தான்.
அதேபோல் அந்த அணியின் பந்துவீச்சில் காட்ரோல், அல்சாரி ஜோசப் இருவரும் வேகப்பந்துவீச்சில் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கின்றனர். ஆனால் சுழலில் தத்தளிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிலைமை இந்தியாவிற்கு சாதகமாக அமைந்து வருகிறது. இன்றைய போட்டியில் இரு அணியும் சமபலத்துடன் மோதவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆடுகளம்;
இன்றைய போட்டி தொடங்கவுள்ள கட்டாக் மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானமாக இருக்கும் என புள்ளி விவரங்கள் கூறுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 18 ஒருநாள் போட்டியில், 11 போட்டிகளில் சேஸிங் செய்தவர்களே வெற்றிபெற்றுள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் இந்த மைதானத்தில் இந்திய அணி கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 381/6 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தேச அணி விபரம்:
இந்தியா: விராட் கோலி (கே),ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஷார்துல் தாகூர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி
வெஸ்ட் இண்டீஸ்:பொல்லார்ட் (கே), ஷாய் ஹோப், எவின் லூயிஸ், சிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ்,ஜேசன் ஹோல்டர், கீமோ பால், அல்சாரி ஜோசப், ஷெல்டன் காட்ரெல், கேரி பியர்
இதையும் படிங்க: ஜோ ரூட்டிற்கு நெருக்கடி தருவோம் - ஜாக் காலிஸ் திட்டவட்டம்!