ராய்ப்பூர்: சர்வதேச சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் வங்க தேச லெஜண்ட்ஸை எதிர்த்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சர்வதேச சாலை பாதுகாப்பு தொடரில் வங்க தேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டி ஷாகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 12) நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய வங்க தேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் மெஹ்ராப் ஹொசைன் 45 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும் அடங்கும்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நஷீமுத்தின் மற்றும் அப்ஃடாப் ஆகியோர் தலா 24 பந்துகளில் 33 மற்றும் 31 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸை பொருத்தவரை இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 18.5 ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து வெற்றியை ருசித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிர்ட் எட்வர்ட்ஸ் 28 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார்.
இதில் ஆறு பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இந்நிலையில் மகிந்திரா நாககமுத்து பந்தை எல்லைக் கோட்டிற்கு விரட்டி போட்டியை இனிதாக முடித்துவைத்தார். வெஸ்ட் இண்டீஸ் 18.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்க தேசம் வெளியேற்றம்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றதன் மூலம் வங்க தேச லெஜண்ட்ஸ் தொடரிலிருந்து வெளியேறியது. எனினும் தென் ஆப்பிரிக்க அணியுடன் சம்பிரதாய போட்டியொன்றில் விளையாடுகிறது.