இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை செளதாம்டானில் தொடங்கவுள்ளது. கரோனாக்குப் பிறகு நடைபெறும் முதல் சர்வதேச போட்டி என்பதாலும், பார்வையாளர்களின்றி காலி மைதானங்களில் வீரர்கள் விளையாடவுள்ளதாலும் ரசிகர்கள் இந்தப் புதுவிதமான அனுபவத்தைப் பார்க்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐந்து நாள்கள் கூட தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் அவ்வளவு எளிதாக வீழ்த்திட முடியாது. இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் கடுமையாகப் போராடி, தங்களது முத்திரையைப் பதிக்க வேண்டும்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்கள் ஐந்து நாள்களுக்குத் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். எனவே இப்போட்டியை அவர்கள் நான்கு நாள்களாகத்தான் எடுத்துக் கொண்டு ரன்குவிப்பில் முன்னிலை பெற வேண்டும். ஒருவேளை இத்தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றால், அது அவர்களுக்கு மிகப் பெரிய விஷயமாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிராகத் தங்களால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்நாளிலிருந்தே செய்துகாட்ட வேண்டும். உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் பார்க்கப்படும் தொடராக இது இருக்கும் என்பதால், இத்தொடர் பரபரப்பாக இருக்கும்" என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 1988இல் தான் இறுதியாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. இதனால் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.