அயர்லாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று பார்படாஸில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பால் ஸ்டிர்லிங் 63, சிமி சிங் 34 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அல்ஜாரி ஜோசப் 4, ஷெல்டன் காட்ரல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து துரத்தலை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே எவின் லீவிஸ் 7, ஷிம்ரன் ஹெட்மயர் 6, பிராண்டன் கிங் 0 என வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் சாய் ஹோப் உடன் கைக்கோர்த்த நிக்கோலஸ் பூரான் தனது பாணியில் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இணை நான்காவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஹோப் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் சிறப்பாக விளையாடிய பூரான் 52 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதே வேளையில் கேப்டன் பொல்லார்டு அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 4 சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் எடுத்து பேரி மெக்கார்தி பந்தில் அவரிடமே பிடிபட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் இறுதி கட்டத்தில் ஹேடன் வால்ஷ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அந்த அணியின் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.
அப்போது மார்க் அடாய்ர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹேடன் வால்ஷ் ரன் ஏதும் எடுக்காததால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. அடுத்து வீசப்பட்ட மூன்று பந்துகளிலும் தலா ஒரு ரன்கள் கிடைக்க வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரில் ஐந்தாவது பந்தை சந்தித்த காட்ரல் சிக்சர் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாத்தில் த்ரில் வெற்றி பெறச் செய்தார்.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையன்று செயிண்ட் ஜார்ஜியா மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: சாதனை படைப்பாரா பும்ரா?