வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், இந்திய அணி டி20 தொடரை வென்ற நிலையில், தற்போது ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முன்னதாக, ஒருநாள் உலகக்கோப்பையுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவிருந்த கெயில், இந்தியாவுக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஒருநாள் தொடரையடுத்து, இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தத் தொடரின் கடைசி போட்டி கெயிலின் சொந்த மண்ணான ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. இதனால், அதிரடி மன்னன் கெயிலுக்கு இந்த போட்டி சிறந்த ஃபேர்வெல் பார்ட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக் குழுவில் கெயில் இடம்பெறவில்லை. அதேசமயம், முதல் தர போட்டிகளில் அசத்திவரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஹீம் கார்ன்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 6.6 அங்குல உயரமும், 140 கிலோ எடையும் கொண்ட இவரை ரசிகர்கள் குட்டி தானோஸ் (அவெஞ்சர்ஸ் வில்லன்) என்று அழைக்கின்றனர். ஆல்ரவுண்டரான இவர், 55 முதல் தர போட்டிகளில் விளையாடி 2,224 ரன்களும், 260 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக, 2017இல் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில், இவர் தனது சுழற்பந்துவீச்சின் மூலம், கோலி, புஜாரா, ரஹானே ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிராக் பிராத்வெயிட், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்பல், ராஸ்டான் சேஸ், ரஹீம் கார்ன்வால், ஷேன் டவ்ரிச், ஷனன் கேப்ரியல், ஷிம்ரான் ஹெட்மயர், ஷாய் ஹோப், கீமோ பவுல், கீமார் ரோச்.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்டிகுவாவில் நடைபெறவுள்ளது.