நியூசிலாந்துக்கு எதிராக பெர்த்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றிய மிட்சஸ் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். போட்டி முடிந்தபிறகு, ஆஸ்திரேலிய வீரர் வார்னர், நியூசிலாந்து அணியின் கேப்டனும் தனது ஹைதராபாத் அணி வீரருமான கேன் வில்லியம்சனுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுடன் மிட்சல் ஸ்டார்க் சேர்ந்துகொண்டார். இந்தப்புகைப்படத்தை வைத்து, வார்னர் மிட்சல் ஸ்டார்க்கை ஹைதராபாத் அணிக்கு வரவேற்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள நிலையில், வார்னரின் இந்த பதிவைக் கண்டு ஹைதராபாத் ரசிகர்கள் ஒரு நிமிடம் குழப்பமடைந்தனர்.
ஏனெனில், இந்த ஏலத்தில் தனது பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் அறிவித்திருந்தார். கடந்த 2018 சீசனில் கொல்கத்தா அணிக்காக 9.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் ஒப்பந்தமான இவர், காயம் காரணமாக அந்தத் தொடரிலிருந்து விலகினார். மிட்சல் ஸ்டார்க் இறுதியாக 2015இல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்தது சச்சின் கிடையாது; ஆஸி. வீராங்கனை கிளார்க்தான்!