இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கே.எல். ராகுல் சதத்தால் 296 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து, களமிறங்கிய நியூசிலாந்து அணி ஹென்ரி நிக்கோலஸ் (80), கப்தில் (66), டி கிராண்ட்ஹோம் (58 நாட்அவுட்) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 47.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இதனால், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று டி20 தொடரில் அடைந்த படுதோல்விக்கு பழி தீர்த்துக்கொண்டது. 31 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒயிட்வாஷ் ஆன முதல் ஒருநாள் தொடர் இதுவாகும்.
இதைத்தொடர்ந்து, தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில், "நாங்கள் அடித்த ஸ்கோர்களை பார்க்கும்போது இந்தத் தொடர் அந்த அளவிற்கு மோசமாக இல்லை. இந்தத் தொடரின் இக்கட்டான நிலையிலும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியது மட்டுமே அணிக்கு சாதமாக இருந்தது. ஆனால், பவுலிங், ஃபீல்டிங்கில் நாங்கள் விளையாடிய விதத்தை பார்க்கும்போது வெற்றிபெறுவதற்கான அறிகுறி ஒன்றும் தெரியவில்லை.
இதனால், இந்தத் தொடரை வெல்ல நாங்கள் தகுதியானவர்களே கிடையாது. களத்தில் எங்களைவிட நியூசிலாந்து அணி உத்வேகத்துடன் சிறப்பாக விளையாடியது. இதனால், இந்தத் தொடரை வெல்ல அவர்களே தகுதியானவர்கள்.
அதற்கென்று இந்தத் தொடரில் நாங்கள் அந்த அளவிற்கு மோசமாக விளையாடவில்லை. கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தொடர் மூலம் ஒருநாள் போட்டியில் அறிமுகமான மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகியோருக்கு இந்தத் தொடர் நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கும்.
அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம். டெஸ்டில் தற்போது எங்கள் அணி சீராக இருப்பதால், நிச்சயம் இந்தத் தொடரை நாங்கள் வெல்வோம் என நினைக்கிறோம். ஆனால், அதற்கு சரியான மனநிலையுடன் களத்தில் களமிறங்க வேண்டும்" என்றார்.
சிறந்த பந்துவீச்சாளராக கருதப்படும் பும்ரா இந்தத் தொடரில் ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்றமால் போனதும் இந்திய அணி ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்ததற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவர் இந்தத் தொடரில் மொத்தம் 30 ஓவர்களை வீசி 167 ரன்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21ஆம் தேதி வெலிங்டனில் தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க: டி20 போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு : வார்னர் அறிவிப்பு