ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஒவ்வொரு சீசன்களிலும் பல அதிரடி வீரர்களை வைத்திருக்கும் அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிதான். அந்த அணியில் தான் பேட்டிங், பவுலிங் என அனைத்துத் துறையிலும் பட்டையக் கிளப்பும் வீரர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.
ஆர்சிபி அணியில் என்னதான் உலகின் தலைசிறந்த வீரர்கள் ஆடினாலும் அந்த அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதே சோகமான தொடர்கதையாக உள்ளது. கடந்த சீசனிலும் ஆர்சிபி அணி கடைசி இடத்தையே பிடிக்க முடிந்தது.
அந்த அணியில் பேட்டிங்கின் தூணாக கேப்டன் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் பார்க்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை குவித்து அசத்துவார்கள்.
இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஆர்சிபி அணி டேல் ஸ்டெயின், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் உள்ளிட்ட சிறந்த வெளிநாட்டு வீரர்கள் உட்பட 12 வீரர்களை விடுவித்துள்ளது.
அதே சமயத்தில் ஆர்சிபி அணி ஏபிடிவில்லியர்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 13 வீரர்களை தக்க வைத்துள்ளது. இதனால் இம்முறையும் அந்த அணி பல புதிய வீரர்களை களமிறக்க திட்டமிட்டே இந்த முடிவை எடுத்துள்ளது.
இதனிடையே அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ''ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2020 ஐபிஎல் சீசனில் சிறந்த தொடக்கத்தை அளிக்க வேண்டும். நாங்கள் எப்போதும் மெதுவாக தொடங்குகிறோம். இம்முறை அதை மாற்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற வேண்டும்.
எங்கள் அணி எப்போதும் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது. நான் உட்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றார்.