இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் வரும் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக 16 பேர் கொண்ட இலங்கை அணி இன்று இந்தியா வந்தது.
இதுகுறித்து அஸ்ஸாம் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தொடரில் பங்கேற்கவிருக்கும் இரு அணிகளுக்கும் பயிற்சிக்கான நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டங்கள் இப்போது குறைந்துள்ளன. மாநில அரசும் பாதுகாப்பு விஷயங்களை சரியாக செய்துள்ளது.
இதுவரை போட்டியை காண்பதற்கு 27 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. இறுதி நேரத்தில் மீதியிருக்கும் டிக்கெட்டுகளும் விற்றுவிடும் என்றார்.
இந்த தொடருக்காக முன்னாள் இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதேபோல் இந்திய அணியில் காயம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்விலிருந்த பும்ரா மற்றும் தவான் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். டி20 தொடரில் ரோஹித் சர்மா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்த இலங்கை அணி: மலிங்கா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, அவிஸ்கா ஃபெர்னான்டோ,. மேத்யூஸ், ஷனகா, குசால் பெரேரா, டிக்வெல்லா, தனஞ்செயா டி சில்வா, உடானா, ராஜபக்ஷ, தஷன் ஃபெர்னான்டோ, ராஜா, லஹிரு குமாரா, குசால் மெண்டிஸ், மூனகன்.
இதையும் படிங்க: செர்பிய நடிகையைக் கரம்பிடிக்கும் பாண்டியா