ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் வருகிற ஏப்ரல் மாதம் முதல் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக குறைந்த அளவிலான வீரர்கள் ஏலத்தையும் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி நடத்தப்பட்டது.
இதில் தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கும், கைல் ஜெமிசன் 15 கோடி ரூபாய்க்கும், கிளென் மேக்ஸ்வேல் 14 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இந்த ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், நியூசிலாந்து அணியின் மார்டின் கஃப்தில் ஆகியோரை எந்த அணிகளும் ஏலம் கேட்கவில்லை.
இதுகுறித்து பேசிய ஆரோன் ஃபின்ச், “நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் ஐபிஎல் ஒரு அற்புதமான டி20 தொடராகும். ஆனால் இந்த சீசனில் நான் எந்த அணியிலும் இடம்பெறாமல் இருப்பது எதிர்பார்த்த ஒன்று தான்.
நான் கிரிக்கெட் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். ஆனால் தற்போதுள்ள சூழலில் வீட்டில் உள்ளவர்களோடு சிறிது நேரத்தை செலவிட விருப்பமாகவுள்ளது. ஏனெனில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நாங்கள் தனிமைப்படுத்துதல், பாதுகாப்பு சூழலில் இருப்பது போன்ற பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளோம். இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு இல்லாததால், அந்த நேரத்தை எனது குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அறிமுக வீரர்களுக்கு வாழ்த்து கூறிய கிரிக்கெட் பிரபலங்கள்!