வங்காளதேச அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் தமிம் இக்பால். இவர் சமீபத்தில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் விராட் கோலி தனது அனி வீரர்களின் உடற்தகுதியில் அதிகம் கவனம் செலுத்தும் நபர் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தமிம், "நான் நிச்சயம் இதனை சொல்லியே ஆக வேண்டும். இந்தியா எங்களது அண்டை நாடு என்பதால் இந்தியாவை நாங்கள் நிறைய விஷயங்களில் பின்பற்றுகிறோம். அதன் ஒரு பகுதியாக வங்கதேச அணி இந்திய அணியை பின்பற்றியே அனைத்து செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது அணி வீரர்களின் உடற்தகுதி குறித்து தீவிரம் காட்டி வருபவர். அந்தவகையில் நாங்கள் அவரின் இச்செயலை பின் பற்றி எங்களது அணி வீரர்களின் உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
ஆனால் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் உடற்தகுதி குறித்து பெரிதாக யோசித்தது கிடையாது. ஆனால் தற்போது விராட் கோலியை பின்பற்றி நான் எனது உடற்தகுதியில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறேன்.
எங்கள் அணியில் சிறந்த உடற்தகுதியில் இருப்பவர் முஷ்பிக்கூர் ரஹிம். காரணம் அவர் எப்போதும் தன்னை முழு உடற்தகுதியில் வைத்திருக்கும் நபர். மேலும் இந்தியாவில் விராட் எப்படியோ அதுபோன்றே எங்களது அணியில் முஷ்பிக்கூர் உடற்தகுதியில் சிறந்து விளங்குபவர்" என்று தெரிவித்துள்ளார்.