இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இன்று தனது 32ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். ஐசிசியின் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசைப் பட்டியிலில் முக்கிய இடத்தை வகிக்கும் இவர், 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் அறிமுகமானார். இதுவரை 288 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள இவர், 11,867 ரன்களை குவித்துள்ளார்.
மேலும் தற்போது வரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,240 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 254 ரன்கள் விளாசியுள்ளார். அதேபோல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 82 போட்டிகளில் விளையாடி 2,794 ரன்களை எடுத்துள்ளார். இத்தனை சாதனைகளை கடந்து, கிங் கோலி என தனது ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டுவரும் இவர், இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
அவருக்கு திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறிவருகின்றனர்.
ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, "பிறந்தநாள் வாழ்த்துகள் விராட் கோலி. மென்மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான விவிஎஸ் லக்ஷ்மன், "பிறந்தநாள் வாழ்த்துகள் விராட் கோலி. வாழ்வில் மேலும் பல வெற்றிகள், அன்பு, மகிழ்ச்சிகள் பெற வாழ்த்துகள்" என ட்வீட் செய்துள்ளார்.
கோலியை புகழ்ந்து வாழ்த்து கூறியுள்ள பிசிசிஐ தனது ட்விட்டர் பதிவில், "2011 உலக கோப்பை வெற்றியாளர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இதுவரை 21,091 ரன்களையும், 70 சதங்களையும் விளாசிய வீரர், இந்திய கேப்டனாக இருந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர்.
ஆண்களுக்கான டி20 போட்டிகளில், அதிக ரன்களைப் பெற்றவர் போன்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் விரித்திமான் சாஹா கூறியுள்ள வாழ்த்துக் குறிப்பில், "பிறந்தநாள் வாழ்த்துகள், அதிக அன்புடன் இன்றுபோல வரும் காலங்களிலும் நாம் ஒன்றாக மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: 460 ரன்களில் 302 ரன்களை ஓடி எடுத்த விராட் கோலி!