டெஸ்ட், ஒருநாள் அரங்கில் பல சாதனைகளை நிகழ்த்திவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தற்போது டி20 கிரிக்கெட்டிலும் புதிய மைல்கல்லை எட்டவிருக்கிறார். உள்ளூரில் விளையாடிய சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 975 ரன்களை குவித்துள்ள விராட் கோலி, ஆயிரம் ரன்களை எடுக்க இன்னும் அவருக்கு 25 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
எனவே இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவர் இச்சாதனையைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கோலி இச்சாதனையைப் படைக்கும் பட்சத்தில் நியூசிலாந்தின் கப்தில், காலின் முன்ரோ ஆகியோருக்கு பிறகு இதனை நிகழ்த்தும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை அடைவார்.
அது மட்டுமல்லாது சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பட்டியலில் இந்திய அணியின் ரோஹித் சர்மா 2 ஆயிரத்து 547 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள கோலி, ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்க்க இன்னும் மூன்று ரன்கள் மட்டுமே தேவை.
எனவே இன்றையப் போட்டியில் இந்த இரண்டு சாதனையையும் கோலி படைப்பார் என்ற எதிர்பார்ப்பபில், அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.
முன்னதாக ஹைதரபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி, 208 ரன்களை சேஸ் செய்தபோது கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே இந்திய அணி டி20 போட்டிகளில் சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோராகும்.