உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெளியானதைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. கோலியின் கேப்டன்சியை பலரும் விமர்சனம் செய்தனர். மேலும், கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் செயல்பாடுதான் உலகக்கோப்பையை வெல்ல முடியாததற்குக் காரணம் என்று துணைக் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார் எனவும் கூறப்படுகிறது. இதனால் கோலிக்கும் ரோஹித்துக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.
இப்படி பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், ரோஹித் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்திருக்கிறார். அதற்கு முன்பே கோலியையும் அன்ஃபாலோ செய்திருக்கிறார். ஆனால், கோலி ரோஹித்தை பாலோ செய்கிறார். இந்த விவகாரத்தின் மூலம் கோலி- ரோஹித் இடையே நடக்கின்ற பனிப்போர் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது எனப் பலரும் கூறி வருகின்றனர்.
மேலும், ஐசிசி விதிமுறைகளை மீறி ரோஹித் ஷர்மா தன் குடும்பத்தாரை அதிக நாட்கள் இங்கிலாந்தில் வைத்திருந்ததால்தான் இவருக்கும் கோலிக்கும் பற்றிக் கொண்டது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செல்ல இன்று இந்திய வீரர்கள் புறப்பட்டனர். ஆனால், புறப்படும் முன் கேப்டன் கோலி செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்காமல் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைப் பற்றி பிசிசிஐயும் வாய் திறக்கவில்லை. இம்மாதிரியான விவகாரங்கள் நடந்தால், அணியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பது கூட தெரியாமலா பிசிசிஐ செயல்படுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே, உலகக்கோப்பைத் தொடரில் தோல்வியடைந்திருப்பதால் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அணிக்குள் நடக்கும் விவகாரங்களைத் தீர்க்காமல் விட்டால் சக வீரர்களின் ஆட்டத்திறன் பாதிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.