முதலிடத்தில் கோலி:
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் முறையே 2,633 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தனர். இதனால், ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி இப்பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைக்க கோலிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது.
இந்நிலையில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று இரண்டாவது டி20 போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில், 143 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய கோலி 17 பந்துகளில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர் உட்பட 30 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அவர் 2,663 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா 2,633 ரன்களுடன் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள்:
- கோலி (இந்தியா) - 2663 ரன்கள்
- ரோஹித் சர்மா (இந்தியா) -2633 ரன்கள்
- மார்டின் கப்தில் (நியூசிலாந்து) - 2436 ரன்கள்
- சோயப் மாலிக் (பாகிஸ்தான்) - 2263 ரன்கள்
- பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) - 2140 ரன்கள்
கேப்டன்களிலும் கெத்து காட்டிய கோலி:
இதுமட்டுமின்றி, சர்வதேச டி20 போட்டிகளில் 1,000 ரன்களை வேகமாக கடந்த கேப்டன்களின் வரிசையில் தென் ஆப்பிரிக்காவின் டூப்ளஸிஸை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம் பிடித்துள்ளார். டூப்ளஸிஸ் 31 இன்னிங்ஸில் 1,000 ரன்களை எட்டிய நிலையில், கோலி தனது 30ஆவது இன்னிங்ஸிலையே இச்சாதனையை எட்டினார்.
கோலியின் அசத்தலான ஆட்டத்தால் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் வேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டன்கள்
- விராட் கோலி (இந்தியா) - 30 இன்னிங்ஸ்
- டூப்ளஸிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 31 இன்னிங்ஸ்
- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 36 இன்னிங்ஸ்
- இயான் மோர்கன் (இங்கிலாந்து) - 43 இன்னிங்ஸ்
- வில்லியம் போர்டர்ஃபீல்டு (அயர்லாந்து) - 54 இன்னிங்ஸ்
- தோனி (இந்தியா) - 57 இன்னிங்ஸ்
மேற்குறிப்பிட்ட சாதனைகள் மூலம், நடப்பு ஆண்டை கோலி வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். இன்னும் இந்த ஆண்டில் அவர் என்னென்ன சாதனைகளைப் படைப்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘நான் சொல்வதை விராட் கோலி ஏற்றுக்கொள்வார்’ - ரோஹித் சர்மா!