இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று (பிப்.24) நடைபெற்ற 3ஆம் சுற்று போட்டியில் கேரளா அணி - ரயில்வேஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ரயில்வேஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கேரளா அணியின் தொடக்க வீரர்கள் ராபின் உத்தப்பா - விஷ்னு வினோத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சை சிக்சர்களுக்கு பறக்கவிட்டு அசத்தியது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதமடித்து அசத்தினர். பின்னர் சதமடித்த கையோடு உத்தப்பா ஆட்டமிழக்க, அவரைத் தொடந்து 107 ரன்களில் விஷ்னு வினோத்தும் ஆட்டமிழந்தார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் கேரளா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களை எடுத்தது. ரயில்வேஸ் அணி தரப்பில் கரண் சர்மா, பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ரயில்வேஸ் அணியில் தொடக்க வீரர் பிரதாம் சிங், ஷிவம் சௌத்ரி ஆகியோர் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த தேவ்தர் - அரிந்தம் கோஷ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரைசதம் கடந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இருப்பினும் 49.4 ஓவர்கள் முடிவில் ரயில்வேஸ் அணி 344 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் கேரளா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் ரயில்வேஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க: ‘நரேந்திர மோடி விளையாட்டு அரங்கம்’ என்ற புதிய அடையாளத்தில் மொடீரா!