இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நவம்பர் 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக இருநாட்டு வீரர்களும் கடுமையான வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடர் குறித்து பேசிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், “ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், வழக்கத்திற்கு மாறான பேட்டிங் நுட்பத்தை வெளிப்படுத்தி வருகிறார். பொதுவாக, டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசும் பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேனின் ஆஃப் ஸ்டம்ப் திசையிலோ அல்லது நான்காவது ஸ்டம்ப் வரிசையிலோ தான் பந்துவீச முற்படுவர். ஆனால் ஸ்மித்தைப் பொறுத்தவரை அவரது கணிக்கமுடியா பேட்டிங் நுட்பம் காரணமாக பந்துவீச்சாளர்கள் தடுமாறி வருகின்றனர்.
இதனால் ஸ்மித்திற்கு பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் எப்போதும் வீசுவது போல் இல்லாமல், ஸ்விங், யார்க்கர், ஆஃப் சைடு யார்க்கர், ஸ்டம்ப் லைன் போன்ற யுக்திகளைக் கையாள வேண்டியது அவசியம். தற்போதுள்ள இந்திய அணியில், பந்துவீச்சில் பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா போன்ற யார்க்கர் மற்றும் பவுன்சர் வீசும் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இருப்பினும் அவர்கள் இந்த யுக்திகளைக் கையாண்டால் ஸ்மித்திற்கு எதிராக பந்துவீச உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
விராட் கோலியின் விடுப்பானது இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும். இருப்பினும் அவரது இடத்தை புஜாரா நிரப்புவார் என எதிர்பார்க்கிறேன். அதேசமயம் அஜிங்கியா ரஹானேவும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அவரது ஆட்டமும் எதிரணிக்கு சவாலளிக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘தந்தையின் கனவை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன்’ - முகமது சிராஜ் உருக்கம்!