கரோனா வைரஸ் காரணமாக இந்திய வீரர்கள் நீண்ட நாள்களாக ஓய்வில் இருந்த நிலையில், பிசிசிஐ வீரர்கள் பயிற்சி செய்வதற்கு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து இந்திய வீரர் குல்தீப் யாதவ் தனது சிறுவயது பயிற்சியாளர் கபில் பாண்டே உடன் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து குல்தீப் யாதவ் பேசுகையில், ''சிறுவயதிலிருந்து இதே மைதானத்தில் தான் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். காலை 7 மணி 9.30 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் பயிற்சி செய்கிறேன். இன்னும் ஓரிரு வாரங்களில் சர்வதேச போட்டிகளில் ஆடும் அளவிற்கு தயாராகி விடுவேன்.
பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவது சிறுவயதிலிருந்து எனது பழக்கமாக உள்ளது. அதற்கு ஐசிசி தடை விதித்துள்ளதால், பயிற்சியின்போது உமிழ்நீர் பயன்படுத்தாமல் பந்துவீசி வருகிறேன்.
கரோனா சூழல் கட்டுக்குள் வந்த பின்னர் ஐபிஎல் தொடர் நடக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்போது கிரிக்கெட் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கும்'' என்றார்.