ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1990களிலும், 2000களிலும் 300 ரன்களை சேஸ் செய்த போட்டிகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதுவே 2008க்குப் பிறகு தற்போதுவரை இந்தநிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு டி20 போட்டியின் வருகை, பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக விதிமுறையும் ஆடுகளமும் இருப்பதுதான் காரணம் என்பது வேறுகதை.
பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக விதிமுறைகள் இருந்தாலும், 300-க்கும் மேற்பட்ட ரன்களை பலமுறை சேஸ் செய்வது பேட்ஸ்மேன்களுக்கே உரித்தான சவால்தான். இந்தச் சவாலில் பலமுறை வெற்றிபெற்றவர் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் கோலி. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 316 ரன்கள் இலக்கை இந்திய அணி 49ஆவது ஓவரில் எட்டியது. இதில், கோலி 83 பந்துகளில் 85 ரன்கள் அடித்திருந்தார்.
சேஸ் மாஸ்டர்
இந்திய அணி 10 போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக எட்டியுள்ளது. அதில் கோலி ஏழு சதம், ஒரு அரைசதம் என இதுவரை 993 ரன்களை குவித்து தான் சேஸ் மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்காட்டினார். தனது சிறப்பான பேட்டிங்கால் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த வீரராகவும், சேஸ் மாஸ்டராகவும் தற்போது அவர் உச்சம் தொட்டிருந்தாலும் அதற்கான முதல் படியை அவர் கடந்துவந்து இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த 10 ஆண்டுகளில் கோலியின் சிறந்த இன்னிங்ஸ் எது என்று ரசிகர்களிடம் கேட்டால், பெரும்பாலானோர் 2012இல் இலங்கை அணிக்கு எதிராக அவர் 83 பந்துகளில் விளாசிய 133 ரன்களைத்தான் கூறுவர். 320 ரன்களை 40 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், சிறந்த பேட்ஸ்மேன்களை தனது யார்க்கர் பந்துகளால் திணறடித்த மலிங்காவின் ஒரே ஓவரை கோலி 24 ரன்கள் அடித்த காரணத்தையும் அவர்கள் முன்வைப்பர்.
ஆனால், இந்தப் போட்டிக்கு முன்னதாகவே கோலி மலிங்காவின் பந்துவீச்சை துவம்சம் செய்துள்ளார். 2009 இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
கோலியின் முதல் சதம்
அப்போது இந்திய அணியின் கேப்டனாக சேவாக் இருந்தார் என்பது சுவாரஸ்யமாகும். முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி உபுல் தராங்காவின் சதத்தால் இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. தொடக்க வீரர்களான சச்சின் (8), சேவாக் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நான்காவது வீரராகக் களமிறங்கிய கோலி, கவுதம் கம்பிருடன் ஜோடி சேர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் டெல்லியைச் சேர்ந்த வீரர்கள் என்பதால் இப்போட்டியில் சிங்கிள், டபுள் எடுப்பதில் இருவருக்குள்ளான கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட்டானது.
இதனிடையே, மலிங்கான் 9ஆவது ஓவரின் கடைசி நான்கு பந்துகளையும் அவர் மிட் விக்கெட், கவர், தேர்டு மேன், ஃபைன் லெக் என நான்கு திசைகளிலும் பவுண்டரி அடித்து அதகளப்படுத்தினார். கோலி தனக்கான வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என சேவாக் இப்போட்டி தொடங்குவதற்கு முன் தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றார்போல் சிறப்பாக விளையாடிய கோலி 38ஆவது ஓவரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இப்போட்டியின் 37ஆவது ஓவரில் கோலி - கம்பிர் இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்தனர் என்பது மேலும் சுவாரஸ்யமாகும்.
கோலி 107 ரன்களில் அவுட்டானலும், கம்பிர் 150 ரன்கள் விளாசியதால் இந்திய அணி 48.1 ஓவர்களில் 317 ரன்களை சேஸ் செய்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகன் விருது கம்பிருக்கு அளிக்கப்பட்டாலும், அந்த விருதை அவர் கோலிக்கு தந்து உற்சாகப்படுத்தினார்.
அன்று தொடங்கிய கோலியின் பயணத்தை பத்தாண்டுகளுக்கு பின் தற்போது திரும்பிப் பார்த்தால் சாதனைகளால்தான் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருநாள் போட்டியில் அவர் முதல் சதம் அடித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை அவர் 43 ஒருநாள் சதங்களை விளாசி அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது அனைவரையும் வியப்படைச் செய்துள்ளது.
இதையும் படிங்க: கிரிக்கெட்டின் அரசன் விராட் கோலி....!