"வாழ்க்கைல ஒரு வேல சோத்துக்கே கஷ்டப்பட்டுட்டு இருந்தப்போ, என் வாழ்க்கைய உயிர்ப்பாவும் சந்தோஷமாவும் வச்சிருந்ததுல கிரிக்கெட்டிற்கு பெரும் பங்குண்டு" இப்படி ஒரு கமெண்ட்டை ஒருத்தர் பதிவிட்டிருந்தார்... இதே உணர்வு இந்தியாவில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
'யாரோ யாரையோ கிரிக்கெட்ல ஜெயிக்கிறான். அதப்பாக்குற நமக்கு நாமளே ஜெயிச்ச மாதிரி சந்தோஷம்' உண்மையை சொல்லவேண்டுமானால் பொதுவெளியில் ஒருவன் பெறும் வெற்றி, பெரும்பான்மையான மக்களுக்கு வாழ்க்கையில் ஊக்கத்தைக் கொடுக்கும்.
உயிர்ப்பான ஆரோக்கியமான விளையாட்டைப் பார்க்க வேண்டுமானால் அதற்கு மக்களை ஈர்க்கும் வீரர்கள் வேண்டும். கபில் தேவ், சுனில் கவாஸ்கர், சச்சின், தோனி என ஓவ்வொரு காலத்திற்கும் ஒரு மாபெரும் வீரனை இந்திய கிரிக்கெட் தயார் செய்துகொண்டே இருந்தது, இருக்கிறது. அதில் இந்த காலத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் தலைசிறந்த வீரன் Jersey No.18 and The Name is Virat Kohli.
ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கையில் சச்சின் அளவிற்கு யாரும் விமர்சனத்தை சந்தித்திருக்க மாட்டார்கள். அதேபோன்ற விமர்சனங்களைதான் விராட் கோலி தற்போது சந்தித்துவருகிறார். விராட் கோலி என்னும் இளைஞன் இந்திய கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தபோது சச்சின், சேவாக், யுவராஜ், ஹர்பஜன், கங்குலி, லக்ஷ்மண் என எல்லாரும் சீனியர்கள். சர்வதேச கிரிக்கெட்டை ஆடத்தொடங்கிய சில நாட்களிலேயே உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றார். அது சிலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் 2007ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்கு சிறப்பாக ஆடிவந்த இஷாந்த் ஷர்மா உள்ளிட்ட சில வீரர்கள் அந்த அணியில் இல்லை. இருந்தும் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் அணி நிர்வாகம் விராட்டை தேர்வு செய்தது. தொடர் தொடங்கிய பிறகும் ரெய்னாவை சேர்க்காமல் விராட் கோலியை தேர்வு செய்தார்கள். இந்த விமர்சனத்திற்கு எல்லாம் முதல் போட்டியிலேயே சதத்தை விளாசி பதில் கொடுத்தார். ஆடும் ஒவ்வொரு போட்டியிலும், தன்னை மெருகேற்றிக்கொண்டே இருந்தார் விராட் கோலி.
உலகக்கோப்பை வென்றுவிட்டு, கடந்த 24 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டை சச்சின் தோள்களில் சுமந்துகொண்டிருந்தார். இப்போது எங்களது நேரம். எனது நேரம் என கூறும்போது விராட் கோலிக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் என சிறு நினைப்பு எழுந்தது.
ஆனால் உலகமே மலிங்கா பந்திற்கு நடுங்கிகொண்டிருக்க, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்ற தொடரில் மலிங்காவின் யார்க்கர், ஸ்லோ - பால், பவுன்சர் என எந்தப் பந்தானாலும் விராட் கோலியை அசைக்க முடியவில்லை. இந்திய அணியின் வளரும் நட்சத்திரமாக உருவான நாட்கள் அவை.
ஆனால் அந்த நட்சத்திர அந்தஸ்து சில நாட்களிலேயே இங்கிலாந்தில் காணாமல் போனது. இங்கிலாந்துக்கு சென்று ஆடிய அனைத்து டெஸ்ட் போட்டியிலும் ஒருமுறை கூட 50 ரன்களை கடக்க முடியவில்லை. விராட் கோலி சோடை போய்விட்டார். வளரும் நட்சத்திரம் அல்ல, வீழ்ந்த நட்சத்திரம் என விமர்சனங்கள் எழுந்தன.
அந்த விராட் கோலி என்னும் வீழ்ந்த நட்சத்திரம் ஆஸ்திரேலியத் தொடரில் எரிநட்சத்திரமாக மாறியது. இன்றும் விராட் கோலி என்றால், ரசிகர்களுக்கு நினைவில் வருவது அடிலெய்டில் ஆடிய ஆட்டம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்தப் போட்டியில் ஜான்சன், ஹாரிஸ், லயன், சிடில் என யார் பந்து வீசினாலும் விராட்டை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. அப்போது இந்திய அணியின் எதிர்கால கேப்டன் யார் என தோனி அடையாளம் காட்டிச் சென்றார். அதையடுத்து தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற இந்திய அணியின் கேப்டன்சி கிரீடம் கோலியின் தலையை பிடித்துக்கொண்டது.
கிரிக்கெட் என்ற விளையாட்டு பார்க்க எளிதாகத் தோன்றினாலும், கடினமான விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. ஒரு வீரர் தனது கை மணிக்கட்டை அதிகமான அளவிற்கு பயன்படுத்தினால், அவன் கிரிக்கெட் உலகை ஆளலாம். விராட் கோலியின் ஒவ்வொரு டெஸ்ட் இன்னிங்ஸிலும் கை மணிக்கட்டுகள் எவ்வளவு உதவுகிறது என்பதை கவனித்தால் தெரியும்.
டி20 கிரிக்கெட் வளர்ச்சியடைந்த பிறகு பெரும்பாலும் வீரர்கள் பவுண்டரி, சிக்சர் அடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் கிரிக்கெட்டில் வெற்றிபெற வேண்டுமென்றால், (Running between the wickets) ஓட வேண்டும். ஒவ்வொரு ரன்னும் இங்கே வெற்றியைத் தீமானிக்கும். இன்றும் விராட் கோலி அதிகப்படியான சதங்களை விளாசுவதற்கு பவுண்டரி, சிக்சர்களை விட சிங்கிள்கள்தான் அதிகம் உதவுகின்றன.
இந்தியா, இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் அடிப்பதெல்லாம் இருக்கட்டும்... விராட் கோலியை ஆண்டர்சன் பந்தில் இங்கிலாந்தில் அடிக்க சொல்லுங்கள் என விராட் கோலி எதிர்ப்பாளர்கள் கூற... செஞ்சுட்டா போச்சு என்ற மனநிலையில் இங்கிலாந்துக்கு சென்று முதல் இன்னிங்ஸில் இருந்தே வெறித்தனமாய் ஆடினார்.
ஆண்டர்சனை வைத்து கோலியை வம்புக்கு இழுத்தவர்கள், இம்முறை பேச முடியாமல் திருதிருவென விழித்தார்கள். ஆடிய எந்தவொரு போட்டியிலும் விராட் கோலியை ஆண்டர்சனால் வீழ்த்த முடியவில்லை. இங்கே மட்டுமல்ல SENA நாடுகளின் சிறந்த பந்துவீச்சாளர்களான ரபாடா, ஸ்டெயின், மோர்கல், ஜான்சன், கம்மின்ஸ், ஆண்டர்சன், பிராடு என எந்த பந்துவீச்சாளராலும் விராட் கோலி சதம் அடிப்பதை தடுக்க முடியவில்லை.
கேப்டன் பதவியேற்றவுடன் விராட் கோலி செய்த சில முக்கிய முடிவுகளில் ஒன்று வீரர்களின் ஃபிட்னஸ் (fitness). இந்திய வீரர்களில் யுவராஜ், கைஃப் என ஒன்றிரண்டு ஃபீல்டர்கள் மட்டும் சிறப்பாக இருந்த நிலையில், இன்று இந்தியாவின் ஒட்டுமொத்த அணியே சிறந்த ஃபீல்டர்களாக உருவாகிவிட்டார்கள் என தென் ஆப்பிரிக்க கேப்டன் வாயால் பாராட்ட முக்கிய காரணம் விராட் கோலி.
சீசன் கிரிக்கெட்டர் என்றார்கள்... முற்றுப்புள்ளி வைத்தார்., SENA நாடுகளில் அடிக்க சொன்னார்கள்... போதும் போதும் என சொல்லும் அளவிற்கு அடித்துக் காட்டினார்., ஐபிஎல் தொடரில் சதம் விளாசவில்லையே என்றார்கள்... ஒரே தொடரில் நான்கு சதங்கள் விளாசினார்... கேப்டன்சி வந்தால் பேட்டிங் பாதிக்கப்படும் என்றார்கள்... கேப்டன்சிக்கு பிறகுதான் சதத்தை விட இரட்டை சதத்தை அடிக்க ஆரம்பித்தார்., பெரிய போட்டிகளில் சொதப்புகிறார் என்கிறார்கள்... இனி அதையும் முடிவுக்கு கொண்டு வருவார்.
ஒரு சிலர் மீது விமர்சனத்தை வைக்கையில் அந்த விமர்சனத்தை எதிர்கொள்ள தயங்குவார்கள். விராட் கோலியைப் பொறுத்தவரை விமர்சனத்திற்கு பதில் சொல்லமாட்டார். அந்த விமர்சனத்திற்கு தனது ஆட்டத்தால் பதிலடி கொடுப்பார்...
ஆக்ரோஷம் என்ற வார்த்தைக்கு ஆஸ்திரேலியர்களும், இங்கிலாந்து அணியினரும் மட்டுமே எடுத்துக்காட்டாய் இருந்துவந்த நிலையில், இந்திய அணியின் மனநிலையை மொத்தமாக மாற்றிக் காட்டினார். 70ஸ், 80ஸ்-களில் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் போல் 90களில் ஆதிக்கம் செலுத்திய அணி ஆஸ்திரேலியா. கண்கூடாக ஆதிக்கம் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கப்பட்ட ஆண்டுகள் அவை. விராட் கோலி இப்போது அதைதான் செய்ய முயன்றுகொண்டிருக்கிறார்.
விராட் கோலி என்னும் வீரர் மைதானத்தில் களமிறங்கினால், இங்கே வீட்டிலிருக்கும் பார்வையாளனுக்கு ஆக்ரோஷத்தைக் கடத்திவிடுவார். சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்தான் டெஸ்ட் தொடரின் மிகச்சிறந்த வீரர் எனப் பேசத்தொடங்கினார்கள். அங்கே ஒப்பீடு செய்யப்பட்டது விராட் கோலியுடன்தான்.
அதிலிருந்தே தெரிந்துவிட்டது கிரிக்கெட் உலகில் யார் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறார் என...
இங்கே விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களிலிருந்து 11 ஆயிரம் ரன்களுக்கு செல்ல எடுத்துக்கொண்ட இன்னிங்ஸ்களின் எண்ணிக்கை வெறும் 11 மட்டுமே. இந்த சாதனை யாரும் படைக்காதது. ஏன் சர்வதேச கிரிக்கெட்டில் இதனை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் விராட் கோலி எனும் அசகாய சூரன் செய்து காட்டினான்.
சச்சின் ஓய்வுபெறும்போது அவரின் சாதனைகளைத் தகர்க்க இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும் என விவாதமே செய்தார்கள். ஆனால் அவர்களின் கண் முன்னால் அனைத்து சாதனைகளையும் முறியடித்துக்கொண்டிருக்கிறார் விராட் கோலி.
எந்த ஒரு விளையாட்டில் சாதனைகள் தகர்க்கப்படாமல் இருக்கிறதோ, அந்த விளையாட்டு வளர தடுமாறிக்கொண்டிருக்கிறது என ஒரு ஜாம்பவான் சொன்னார். இங்கே விராட் கோலி சச்சினின் சாதனைகளை தகர்ப்பதால் விராட் வளர்கிறாரா என்றால், நிச்சயம் வளர்கிறார். ஆனால் அதைவிட கிரிக்கெட் அதிகமாக வளர்கிறது. இந்திய கிரிக்கெட் வளர்கிறது. விராட் கோலியின் ஆட்டம் ஒரு போதை போல். ரசித்து பார்க்கத் தொடங்கினால் அது ராஜபோதையாக மாறும். கிரிக்கெட்டின் இளவரசன் என விராட் வந்தபோது அழைத்த உதடுகள், இன்று அரசன் என அழைக்கத்தொடங்கியுள்ளது. #HappyBirthdayKingKohli
இதையும் படிங்க: முல்தானின் சுல்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்#HBDvirendersehwag