ஆஷஷ் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை 100 ரன்களுக்குள் சுருட்டி ஆஸ்திரேலிய அணி 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது.
அதன்படி, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலயா அணி 179 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுஸ்சாக்னே 74, வார்னர் 61 ரன்கள் அடித்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆர்ச்சர் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இரண்டாது நாளில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. வேகப்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைத்த லீட்ஸ் மைதானம் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கும் நன்கு கைகொடுத்தது. ஹசல்வுட், கம்மின்ஸ், பேட்டின்சன் ஆகியோரின் டெரர் பவுலிங் அட்டாக்கை சமாளிக்க முடியாத இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் இங்கிலாந்து 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஹசல்வுட் 5, கம்மின்ஸ் 3, பேட்டின்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் டென்லியை 12 ரன்கள் எடுக்க, அவரைத் தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
இந்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தற்போது ஆடி வருகிறது.