இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்காக கருப்பின, ஆசிய, சிறுபான்மையினர், பாரம்பரியப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் மட்டுமே விளையாடியுள்ளனர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முதல் கருப்பின பெண் என்ற பெருமையைப் பெற்றவர் ரெயின்ஃபோர்ட் பிரெண்ட்.
தற்போது சர்ரே(Surrey) மகளிர் கிரிக்கெட்டின் இயக்குநராக விளங்கி வரும் இவர் கிரிக்கெட்டில் சிறுபான்மையினர் பங்கேற்கும் வகையில் பல நல உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்ததையடுத்து உலகமெங்கும் இனவெறிக்கு எதிரான குரல் ஓங்கி கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இது குறித்து ரெயின்ஃபோர்ட் பிரெண்ட் கூறுகையில், "வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் கிரிக்கெட் விளையாடுகிறார்களா என்பதை நாம் உற்றுநோக்க வேண்டும். கால்பந்து போட்டிகளுடன் ஒப்பிடும்போது இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் பன்முகத்தன்மை இல்லை.
கிரிக்கெட் போட்டி என்பது அனைவருக்குமானது என்பதை நாங்கள் நம்புகிறோம். இனவெறி மட்டுமல்லாமல் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்களும் பொருளாதார சிக்கலில் தவிக்கின்றனர். அந்த தடைகளைக் கடந்து அவர்கள் கிரிக்கெட் விளையாட நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.