இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையிலும், அணியின் கேப்டனாகவும் பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறார். இதனிடையே லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.
அந்தக் கடிதத்தில் இந்தியாவில் உள்ள 12 முக்கிய பிரபலங்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பெயர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக மூத்தத் தலைவர் அத்வானி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பெயரும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து அந்தக் கடிதத்தை பிசிசிஐக்கு அனுப்பிய என்ஐஏ அலுவலர்கள் விராட் கோலிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி அறிவுறுத்தினர். அதிலும் இந்தியா-வங்கதேசம் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் இந்தத் தாக்குதல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
டி20 தொடரில் விராட் கோலி பங்கேற்கவில்லை. இருப்பினும் இந்திய அணிக்கு அச்சுறுத்தல் நிலவுவதால் டெல்லியில் போட்டி நடைபெறும் அருண் ஜேட்லி மைதானத்தில் அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய டெல்லி காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.