இந்திய கிரிக்கெட் அணி இந்தாண்டை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றியோடு தொடங்கியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு தொடர்களையும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. அது மட்டுமல்லாமல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியது.
மேலும் தொடர்ந்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றிய இந்திய அணி 360 புள்ளிகளுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியது. இதனிடையே இந்திய அணி அடுத்தாண்டு பங்கேற்கும் உள்நாட்டு, வெளிநாட்டு தொடர்கள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி முதல் வாரத்தில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.
அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடும் இந்திய அணி அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்கிறது.
இந்திய அணியின் அட்டவணை:
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒருநாள், இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்கிறது
ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா வரும் இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள், இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடர்
ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தச் சுற்றுப்பயணம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வரை நீடிக்கிறது.
இதையும் படிங்க: ஊக்க மருந்து சர்ச்சை: குத்துச்சண்டை வீரருக்கு ஓராண்டு தடை!