கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் 26 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 1.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் உலகம் முழுவதும் ஒலிம்பிக், ஐபிஎல், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், விம்பிள்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனியார் வானொலி நிகழ்ச்சிக்குப் பேட்டியளித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், இந்தாண்டு டி20 உலகக்கோப்பைத் தொடர் ஒத்திவைக்கப்படுவதற்குச் சாத்தியம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடர் ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாகவும் ஒத்திவைக்கப்படலாம்.
இருப்பினும் பார்வையாளர்களின்றிப் போட்டிகளை நடத்துவது நல்ல முயற்சிதான். ஏனெனில் நாங்கள் இதற்கு முன்னதாக நியூசிலாந்து அணியுடன் ஒரு ஒருநாள் போட்டியைப் பார்வையாளர்களின்றி நடத்தி, அதில் வெற்றியையும் பெற்றுள்ளோம்.
ஆனால் பார்வையாளர்களின்றி நடத்தும் போட்டியில் வீரர்களின் மனநிலை சரியாக அமையாது என்ற கருத்து நிலவிவருகிறது. வீரர்களைப் பொறுத்தவரையில் முதல் நான்கு அல்லது ஐந்து ஓவர்கள் மட்டுமே சிறிது தயக்கமாக இருக்கும். பிறகு வீரர்கள் தங்களது விளையாட்டின் மீதே கவனத்தை கொண்டிருப்பர்" என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடர் இந்தாண்டு அக்டோபர் 18ஆம் தேதிமுதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரசின் தாக்கத்தினால் இத்தொடரை ஒத்திவைப்பது குறித்து ஐசிசி ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா எதிரோலி: உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் ஒத்திவைப்பு!