சிட்னியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 2008ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் நடுவரின் தவறான தீர்ப்புகளை தாண்டி, இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை, குரங்கு என இனவெறி ரீதியாக திட்டியது கடும் சர்ச்சையானது.
இதனால் சைமண்ட்ஸ் முதலில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கவில்லை என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் நைல் மேக்ஸ்வெல் மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து நினைவுக்கூர்ந்த அவர்,
"2008இல் ஐபிஎல் தொடரின் முதல் சீசனுக்கான ஏலத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வீரர்களை ஐசிஎல் தொடரில் பங்கேற்காமல் இந்த தொடரில் விளையாட வைக்க சம்மதிக்க வேண்டும் என அப்போதைய தலைவர் லலித் மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் சைமண்ட்ஸ் விவகாரத்தில் மட்டும் அப்படி நடக்கவில்லை.
ஏனெனில் ஹர்பஜன் சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் முதலில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விருப்பம் காட்டவில்லை. அதன் பின், அவருக்கான ஒப்பந்தத்தை எடுத்துக்கூறி சைமண்ட்ஸை ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஒருவழியாக சம்மதிக்க வைத்தேன்.
அவரும் ஐபிஎல் தொடரில் விளையாட தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக மூன்றாண்டுகளுக்கு தலா 1.2 மில்லியன் டாலர்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் 39 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 974 ரன்களும் 20 விக்கெட்களையும் வீழ்த்தினார்" என்றார்.
2011 ஐபிஎல் சீசனில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸூம், ஹர்பஜன் சிங்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.