சிட்னி: கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் களத்தில் இருந்து 39 பந்துகளை எதிர்கொண்டு தனது முதல் ரன்னை எடுத்துள்ளார் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாகனர் பந்து வீச்சை எதிர்கொள்வதில் திணறி வந்தார் நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித். நடைபெற்று முடிந்து முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நான்கு இன்னிங்ஸ்களிலும் இவரது பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து ஐந்தாவது முறை இவரது பந்துக்கு இரையாவதை தடுக்க நினைத்த ஸ்மித், இன்றைய போட்டியில் மிகவும் நிதானமாக வாகனர் பந்தை எதிர்கொண்டார். 46 நிமிடங்கள் வரை அவர், 39 பந்துகளை எதிர்கொண்ட பிறகு தனது முதல் ரன் கணக்கை தொடங்கினார்.
இதன்மூலம் ஸ்மித் தனது முதல் ரன் எடுக்க அதிக நேரத்தை எடுத்துக்கொண்ட போட்டியாக இன்றைய போட்டி அமைந்தது. இதற்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் 18 பந்துகளில் தனது முதல் ரன் எடுத்ததே அதிகமாக இருந்தது.
ஸ்மித்தின் ஆமை வேக ஆட்டத்தை பார்த்து பொறுமை இழந்த ரசிகர்கள், அவர் ரன் எடுத்தவுடன் உற்சாகத்தில் கரகோஷத்தை எழுப்பினர். இதை ஏற்றுக்கொள்ளும்விதமாக தனது பேட்டை உயர்த்திக் காண்பித்த ஸ்மித் பின்னர் தனது வழக்கமான பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.