ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் ஈடுபட்டிருந்த இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த்தின் வாழ்நாள் தடை தண்டனை அண்மையில் ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதனால், அடுத்த ஆண்டு இவரது தண்டனைக் காலம் முடிந்தவுடன் இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் மனநிலை பயிற்சியாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளருமான பேடி உப்டான் தனது சுயசரிதையில் ஸ்ரீசாந்த் குறித்து எழுதியிருந்தார். அதில், சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் ஸ்ரீசாந்த்தை அணியில் சேர்க்காததற்கு அவர், தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பேடி உப்தான் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இது குறித்தும் சிஎஸ்கே அணியை தனக்கு ஏன் பிடிக்காது என்பது குறித்தும் ஸ்ரீசாந்த் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், "உப்டான் அவரது புத்தகத்தில் குறிப்பிட்டதைப் போல நான் எப்போது அவரிடம் தவறாக நடந்துகொண்டேன் என்று அவர் நெஞ்சில் கையை வைத்துச் சொல்லச் சொல்லுங்கள் இது குறித்து லெஜெண்ட் ராகுல் டிராவிட்டிடம்தான் கேட்க வேண்டும். அவர் மேல் எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் என்னை அணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என பலமுறை உப்டானிடம் கெஞ்சியுள்ளேன். அதற்கு முக்கிய காரணமே எனக்கு சிஎஸ்கேவை பிடிக்காது என்பதுதான் .எனக்கு சிஎஸ்கேவை பிடிக்காது என்பது பலருக்கும் தெரியும். அதற்கு தோனியோ அல்லது என். ஸ்ரீநிவாசனோ காரணமல்ல.
எனக்கு சிஎஸ்கேவை பிடிக்காமல் போனதற்கு ஒரே காரணம், அவர்களது மஞ்சள் நிற ஜெர்சிதான். அதே காரணத்துக்காகதான் நான் ஆஸ்திரேலிய அணியையும் வெறுத்துள்ளேன். நான் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளேன், அதனால்தான் சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாட வேண்டும் என்று உப்டானிடம் கேட்டுகொண்டேன்.
ஆனால், அவர் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்னை மனதளவில் காயமடைய செய்துள்ளது. உங்களது புத்தகம் அதிகம் விற்கவேண்டும் என்பதற்காக இதுபோன்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்" என்றார்.
பொதுவாக, ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பில் குறிப்பிட்ட நிறத்துக்காக ஒரு அணியை பிடிக்காது என்று கூறுவது முற்றிலும் தவறு. சிஎஸ்கேவை பிடிக்காததற்கு அவர் தந்த விளக்கத்தை தஞ்சாவூர் கல்வெட்டில்தான் எழுதி வைக்க வேண்டும் என நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.