வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (பிப்.13) முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 232 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் இறுதி நாளான நேற்று முன்தினம், வெஸ்ட் இன்டீஸ் வேகப்பந்து வீச்சாளரான ஷேனன் கேப்ரியல் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்ஸை பார்த்து தன்பால் ஈர்ப்பாளர் என கூறியதாக கூறப்படுகிறது.
அதற்கு ஜோ ரூட்ஸ் தன்பால் ஈர்ப்பாளராக இருப்பதில் ஒன்றும் தவறில்லை, இது கேலிக்காக பயன்படுத்தும் விஷயம் அல்ல என்றும் கூறினார். ஷேனன் கேப்ரியலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நடுவர், ஜோ ரூட்ஸை பாராட்டினார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐ.சி.சி. நடுவர் குழு, ஷேனன் கேப்ரியலுக்கு அடுத்த நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடைவிதித்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.
இது மட்டுமின்றி ஜோ ரூட்ஸின் பக்குவப்பட்ட இந்த பதிலுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.