தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி சென்சூரியனில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி தென்னாப்பிரிக்காவை பேட்டிங் ஆட பணித்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது இலங்கை. மார்க்ரமை 3 ரன்களில் ஆட்டமிழக்க செய்து வெளியேற்றியது. பின்னர் வந்த ஹென்ரிக்ஸ்- வான்டர் டூசன் இணை இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.ஹென்ரிக்ஸ் 46 பந்துகளில் 65 ரன்னிலும், வான்டர் டூசன் 44 பந்துகளில் 64 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் டுமினி அதிரடியாக 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள், தென்னாப்பிரிக்காவின் அட்டகாசமான் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.இலங்கை அணி 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், அந்த அணியின் உடானா அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
உடானா 48 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு கைக்கொடுக்க எந்த வீரர்களும் இல்லாததால், இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்காவிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது.