கிரிக்கெட்டில் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக தென்னாப்பிரிக்காவின் டேஸ் ஸ்டெயின் திகழ்ந்துவருகிறார். 2004இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் மூலம் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். பின்னர், தனது வேகப்பந்து வீச்சின் மூலம் பல முன்னணி பேட்ஸ்மேன்களை கதி கலங்கச் செய்துள்ளார்.
தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். இதுமட்டுமின்றி, ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் நீண்ட நாட்களாக முதல் இடத்தில் இருந்துள்ளார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2016இல் தனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் இவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்த ஒரு போட்டியில் விளையாடமல் இருந்தார். பின்னர், 2018இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் தந்து மீண்டும் அசத்தினார்.
![STEYN](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4051834_steyn.jpg)
இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்காக விளையாடிய போது இவரது தோள்பட்டையில் மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால், உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணியில் இருந்தும் விலகினார். இந்நிலையில், தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் இன்று அறிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மேட்தான் மிகவும் பிடிக்கும். கிரிக்கெட்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட்தான் சிறந்த ஃபார்மேட். அதில் இருந்து ஓய்வு பெறுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இனி எனது கிரிக்கெட் பயணத்தில் தொடர்ந்து டி20, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளேன். எனது கிரிக்கெட் பயணத்தில் உதவிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்டெயின் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் இந்த ஆண்டு பிப்ரவரியில் இலங்கை அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி எந்த ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.