சிட்னி ஷோகிரவுண்ட் மைதானத்தில் இன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை தொடரின் 15ஆவது போட்டியில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்துவந்தது. 10 ஓவர்களின் முடிவில் அந்த அணி 54 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், லவ்ரா வுல்வார்ட் களமிறங்கினார்.
அவரது சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது. லவ்ரா வுல்வார்ட் 36 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் உட்பட 53 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் தியானா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்க அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டை இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேப்டன் டேன் வான், ஷப்னிம் இஸ்மாயில், நொன்குலுலேகோ லபா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இந்த வெற்றியின்மூலம், தென் ஆப்பிரிக்க அணி இந்தத் தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றதால், ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இதையும் படிங்க: ஹென்ரிச் கிளாசன் சதத்தால் ஆஸி.யை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!