இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, நேற்று முன்தினம் (ஜன. 02) கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது, திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயத்தின் இரண்டு இடங்களிலும் அடைப்பு இருப்பதாகவும், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டதாகவும், அவரது உடல்நிலையில் ஆபத்து ஏதும் இல்லை என்றும் மருத்துவ நிர்வாகம் செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து அவர் கூடிய விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நாளை மறுநாள் கங்குலி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கங்குலிக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவில் இருக்கும் ஒருவர் கூறுகையில், “நாளை இதய அறுவை சிகிச்சை நிபுணத்துவம்பெற்ற மருத்துவர் தேவி ஷெட்டி கங்குலியின் உடல்நிலை குறித்து பரிசோதிக்கவுள்ளார். இதனால் நாளை மறுநாள் (ஜன. 06) கங்குலி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கரோனா