மகளிர் கிரிக்கெட்டில் லேடி சூப்பர் ஸ்டாராகத் திகழ்பவர் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா. இவரது அதிரடியான ஆட்டத்துக்காவே ஏராளமான ரசிகர்கள் இங்கு உள்ளனர். காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகிய இவர், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடர் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் ரீ-என்ட்ரி தந்தார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடாமலிருந்த ஸ்மிருதி மந்தானா நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் களமிறங்கி 74 ரன்கள் அடித்து அசத்தினார். அதில் ஒன்பது பவுண்டரி, மூன்று சிக்சர் அடங்கும்.
இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி இப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இப்போட்டியில் ஸ்மிருதி மந்தானா 49ஆவது ரன் எடுத்தபோது, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் (51ஆவது இன்னிங்ஸ்) 2000 ரன்களை எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைப் படைத்தார்.
இதுமட்டுமின்றி, குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்களை அடித்த மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அவருக்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் 41ஆவது இன்னிங்ஸிலும் மெக் லெனிங் 45ஆவது இன்னிங்ஸிலும் இந்தச் சாதனையைப் படைத்தனர். இந்திய அணிக்காக இதுவரை 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மிருதி மந்தானா நான்கு சதம், 17 அரைசதம் என 2025 ரன்களை எடுத்துள்ளார்.