இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 51 டெஸ்ட், 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1999இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின், பாஜகவில் இணைந்த சித்து, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
பின்னர் முக்கியத் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவிலிருந்து விலகி 2017ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதே ஆண்டில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளாராக நின்று கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியில் வெற்றிபெற்றார். பின்னர் இவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்ட நிலையில், அம்மாநில முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் நிலவிவரும் அரசியல் சூழ்நிலை குறித்து மக்களிடம் தெரிவிக்க 'பஞ்சாப் வெல்லும்' என்ற புதிய யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். முன்னதாக, இவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சர்ச்சையானது.
இதையும் படிங்க: கொரோனாவை எதிர்கொள்ள பதறும் பஞ்சாப்!