இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ’பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (டிச.27) நிறைவடைந்த இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் கேப்டன் ரஹானே சதமடித்து அசத்தினார். இதனால் 82 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. இதற்கிடையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் அறிமுக வீரர் சுப்மன் கில் 45 ரன்களில் விக்கெட் இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் கூறுகையில், “ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் சுப்மன் கில்லை பார்த்தபோது, அவரது பேட்டிங் சிறப்பாக இருந்ததாக நான் நினைத்தேன். அவரது ஆட்டம் சர்வதேச கிரிக்கெட்டைச் சேர்ந்தவர் போல தோற்றமளித்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அறிமுக ஆட்டம் சற்று கடினமாக இருந்தது. ஏனெனில் கம்மின்ஸ், ஸ்டார்க் போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இதில் அவரது கேட்ச்சை லபுசாக்னே தவறவிட்ட ஷாட்டைத் தவிர சுப்மன் கில்லின் பேட்டிங் சிறப்பாக இருந்தது” என்று பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க:’பாக்ஸிங் டே’ டெஸ்ட் : சதம் விளாசிய வில்லியம்சன் ; ஆரம்பத்திலேயே தடுமாறும் பாகிஸ்தான்