கரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், வீட்டிலேயே முடங்கியிருக்கும் விளையாட்டு வீரர்கள் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் அதிகம் செலவழித்துவருகின்றனர்.
அந்தவகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் சமூக வலைதளங்கள் மூலமாக நேர்காணலில் பேசினார். அப்போது ஒருவேளை உங்களுக்கு இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சியளிக்க வாய்ப்பு வந்தால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அக்தர், "நிச்சயம் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் நான் அதை ஏற்றுக்கொள்வேன். பந்துவீச்சில் எனக்கு தெரிந்த அறிவை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில் நான் எப்போதும் பின்வாங்கியதில்லை. அதை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கற்றுக்கொடுப்பதில் நான் என்றும் மகிழ்ச்சியடைவேன்.
தற்போதைய பந்துவீச்சாளர்களை விட அதிகம் பேசக்கூடிய ஆக்ரோஷமான, வேகமான பந்து வீச்சாளர்களை நான் உருவாக்குவேன். பேட்ஸ்மேன்களை கதிகலங்கச் செய்வதில் அவர்களது பந்துவீச்சுத்தன்மை நீங்கள் ரசிக்கும்படி இருக்கும்" என பதிலளித்தார்.
முன்னதாக கரோனா வைரஸுக்கு எதிராக நிதி திரட்டும் வகையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடத்த வேண்டும் என அக்தர் ஆலோசனை தெரிவித்திருந்தார். அதற்கு எங்களுக்கு பணம் முக்கியமில்லை என அக்தரின் கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் அக்தரின் ஆலோசனையை தான் வரவேற்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சயித் அஃப்ரிடி தெரிவித்திருந்தார். அக்தரின் கருத்து குறித்து அவர் கூறுகையில்,கரோனாவுக்கு எதிராக நிதி திரட்டும் வகையில், பாகிஸ்தானும் இந்தியாவும் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சோயப் அக்தர் பரிந்துரைத்ததில் எந்தத் தவறும் காணவில்லை.
உலகமே கரோனா வைரஸுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது. இதை ஒழிக்க நமக்கு ஒற்றுமை தேவை. இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்கள் என்றுமே இந்த நிலைமையை சரிசெய்ய உதவாது. கபில்தேவின் கருத்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் அவரிடம் நல்ல விதமான பதிலை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், தற்போதைய நெருக்கடி காலத்தில் அவர் பேசியது எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது விமர்சனம்: அக்தருக்கு யூனுஸ் ஆதரவு!